Wednesday, June 04, 2014

சுற்றுச்சூழல் மாசுபாடு ஓர் அலசல் ரிப்போர்ட்

நாம் நமது வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வதில் செலுத்தும் கவனத்தில் சிறிதளவு கூட சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இல்லை. சுற்று சூழல் என்பது நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தொழிற்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் நகரமயமாதல் காரணமாக சுற்றுச்சூழல் மாறிவிட்டது என்றாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் வாழ்தல் நம் எதிர்கால சந்ததியை மிகவும் பாதிக்கும். மழை குறைந்துவருவது குறித்து கவலைப்படும் நாம் மரங்கள் குறைவது குறித்து கவலைப்படுவதில்லை. சுமார் 20 வருடங்களுக்கு முன் நிலத்தடி நீர் மட்டம் 70 முதல் 100 அடியில் அதிகமாக காணப்பட்டது. சென்னையில் தற்போது நிலத்தடி நீர் மட்டமானது 600 முதல் 1000 அடிகள் சில இடங்களில் 1000 அடிகளையும் தாண்டியும் சென்றுவிட்டது. அனைத்து வீடுகளிலும், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் ஏசி அதிக அளவில் உபயோகிப்பதாலும், வீடுகளில் ஃபிரிட்ஜ் உபயோகிப்பதாலும் அவற்றில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் நம்மை சுற்றியுள்ள காற்றின் வெப்ப அளவை அதிகரிக்கிறது. இந்த வாயுக்களால் ஓசோன் படலத்தின் தன்மை மாறுபட்டுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற நகரங்களின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் காற்றில் வெப்பநிலை அதிகரிக்கிறது. வாகனங்கள் வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடு குறைவாக இருக்க வேண்டும். கார்பன் அளவு அதிகமாவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. தொழிற்சாலைகள் மூலம் வெளிவரும் கழிவுகள் ஆறுகள் மற்றும் குளங்களில் கலப்பதால் நீர் மாசுபடுவதோடு நில வளமும் குறைந்து வருகின்றன ஒரு சில இடங்களில் நிலத்தடி நீரில் அதிகளவு நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் கலப்பதால் நிலத்தடி நீரின் தூய்மையும் கெட்டுப்போகிறது. நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சியாலும், நவீன வாழ்க்கை முறையாலும் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் இந்த சுற்றுச்சூழலானது வெகுவாகவே பாதிக்கப்படுகிறது. இதனால் வரும் காலத்தில் பூமியின் வெப்ப அளவு மேலும் அதிகரிக்க கூடும். நிலத்தடி நீர் மட்டத்தின் அளவும் வெகுவாக குறைந்துவிடும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தால் அதிலிருந்து பரவும் நச்சு வாயுக்கள் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய பல அபாயகர நோய்களை விளைவிக்கும். இந்த நச்சு வாயுக்களால் மலட்டு தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிளாஸ்டிக்கால் ஏற்படக்கூடிய தீங்கை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கலாம். மாசுபாட்டை தடுக்க என்ன செய்யலாம்? உலக அளவில் சுற்றுச்சூழல் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நாளில் மரங்கள் நடுவது, மின்விளக்குகளை குறிப்பிட்ட நேரத்திற்கு அணைத்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது மாசு கட்டுப்பாட்டு விதிகளை தொழில் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும். கழிவுகளின் தரத்தை சோதித்து, தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருள் இல்லை என உறுதி செய்த பிறகே வெளியேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். வீட்டில் மரங்களை வளர்த்து மர வளத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆக்சிஜனை அதிகளவில் பெற முடியும். இதனால் மழையின் அளவும் அதிகரித்து வெப்பமயமாதலை தடுக்கலாம். நீர் மாசுபாட்டை தடுக்க கழிவுநீரை ஆறு, குளங்களில் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கழிவு நீரை சுத்திகரிப்பு செய்த பிறகு கடலில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயப்பட்டறை கழிவுகளை ஆற்றில் விடக்கூடாது. திட மற்றும் திரவக் கழிவுகள் எளிதில் மண்ணை மாசுபடுத்துகிறது. தொழிற்சாலை கழிவுகள் ரசாயன உரங்கள் போன்றவையும் மண்ணை மாசுபடுத்துகின்றன. விவசாயத்தில் ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். கழிவு நீரை சுத்தப்படுத்திய பின்னரே மண்ணில் கலக்க அனுமதிக்கலாம். கழிவுகளை சுத்திகரிக்காமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழில் நிறுவனங்களை தடுக்க கடும் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். கடல் மாசினை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றை மதித்து நடப்பதன் மூலமாக கடல் மாசினை கட்டுப்படுத்தலாம். வாகனங்கள் வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடின் அளவை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்படுகின்றன. இது 4.5 பிபிஎம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment